தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதம ஏற்பாட்டாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
தெஹிவளையில் சனிக்கிழமை(04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 3900 கோடி கிலோ சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளனர் என்றார்.
இலங்கையில் மூன்று பேருக்குச் சொந்தமான ஆறு நிறுவனங்களினால் இந்த வரி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், இவர்களில் போதைப்பொருள் கடத்தல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் உள்ளதாகத் தெரிவித்தார்.
உள்ளூர் கைத்தொழில்களுக்கு விதிக்கப்படும் வரியைப் போன்று தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் வற் வரியை விதிக்கவும், இந்த நச்சு எண்ணெயால் மக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பை அவர்களிடமிருந்து வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
வரிப்பணத்தை ஏமாற்றுவதில் இவர்கள் மாத்திரம் தனியாக செயற்படுவதில்லை. இதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் உதவியை நிச்சயம் மேற்படி இறக்குமதியாளர்கள் பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட வரிச்சலுகைகளால் 90 சதவீத உள்ளூர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நான்கு இலட்சம் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். உள்ளூர் தொழில்முனைவோர் அநாதரவாகியுள்ளனர் என்றார்.