தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு இந்தியா துணைநிற்குமானால் வடகிழக்கு தமிழர்கள் இந்தியாவுக்கான ஆதரவினை நூறு வீதம் வழங்குவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மக்கள் மிகத் தெளிவாக நிற்க வேண்டும். தமிழ் தேசியம் தோற்குமாக இருந்தால் இந்த இலங்கை தீவில் தமிழர்கள் அடிமைகள் அல்லது தமிழர்கள் துடைத்து எறியப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
நேற்று (05) இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் சட்டத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவர் இலங்கையை பொறுத்த அளவில் இலங்கை தீவை மையப்படுத்தி ஒரு பூகோள அரசியல் ஆதிக்க போட்டி நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. அந்த பூகோள அரசியல் போட்டியில் எங்களுடைய தமிழ் மக்கள் சிக்குண்டு இந்த சிங்கள தேசத்தினால் இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் எமது மக்களுக்காக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருந்த வேளையில், எங்களுடைய அந்த போராட்டம் என்பது ஒரு பயங்கரவாத போராட்டம் என உலகத்திற்கு இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் அந்த ஆட்சியாளர்களும் ஒரு பிழையான பிம்பத்தை இந்த சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறி வந்திருந்தனர்.
அந்த நிலையில் எங்களுடைய மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் இலங்கையினுடைய தலைநகர் கொழும்பில் இருந்து கொண்டு தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நியாயமான ஒரு போராட்டம் எங்களுடைய தமிழ் மக்களை பாதுகாப்பாதற்காகத்தான் இந்த இளைஞர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தி இருக்கின்றார்கள் என்கின்ற நியாயப்பாட்டை உலகத்திற்கு எடுத்துக் கூறினார்.
அந்தக் காலப்பகுதியில் 2000 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் காலம். அவருடன் தான் இவர் படித்தார் அவ்வாறு படித்த ஒரு பெரிய மாமனிதர். மிகவும் தமிழ் மக்களுக்காகவோ அல்லது வேறு தரப்புக்காக இல்லாது நீதிக்காக குரல் கொடுக்கின்ற ஒருவர். அந்த அடிப்படையில் தான் அவர்கள் எங்களுடைய விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நியாயமான போராட்டம் என்பதனை சர்வதேசத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்திலேயே அந்த சந்திரிக்காவின் ஆட்சி காலத்தில் சந்திரிகாவினால் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷனுக்கு முன்னால் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமையினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது உலகத்தில் இருக்கின்ற அனைத்து விதமான மனித நேய அமைப்புகளுக்கும் மிக முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தூதுவர்களுக்கும் நாட்டினுடைய மிக முக்கியமான தலைவர்களுக்கும் தெரியும்.
இன்று இந்த நாட்டை மையப்படுத்தி இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் என்பது தணியவில்லை. ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டாலும் எங்களுக்கான இனத்துக்கான விடுதலை போராட்டம் இன்னமும் மௌனிக்கவில்லை. இதனை எமது மக்கள் அனைவரும் நன்கு அறிய வேண்டும்.
புலம்பெயர்ந்த மக்கள் எமது மக்களின் விடுதலைக்காக மிக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள தேசம் ஒரு கனவு கண்டிருக்கின்றது 2009 உடன் எல்லாம் முடிந்து விட்டது என்று. ஆனால் அவ்வாறு இல்லை எங்களுடைய போராட்டம் எழுச்சி பெற்று இருக்கின்றது.
புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற இளையவர்கள் இன்றும் எமது விடுதலைக்காக தாயகத்தில் இருக்கின்ற எமது தமிழ் மக்களது விடுதலைக்காக அவர்கள் எங்கெல்லாம் செல்ல முடியுமோ அங்கு சென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். என்றார்
அதேசமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றிருந்ததுடன்,
ஓய்வு நிலை அதிபர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குககுமார் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.