ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இதன்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தும் விடயம் ஆராயப்படவுள்ளது. தற்போதுள்ள சூழலில், அனைத்துக் கட்சிகளின் ஆதரவு இதற்கு கிடைக்குமா என்பது சந்தேகமே! ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையில், தன்னை அனைத்துக்கும் ஆதரவானவராகக் காண்பித்துக் கொள்கின்றார். இதன்மூலம் தான் தீர்வுக்கு தயாராக இருக்கிறார் என்றும் அனைத்து கட்சிகளும் உடன்பட்டால், அதில் தனக்கு ஆட்சேபனை இல்லையெனவும் கூறுகின்றார். இதன்மூலம் தமிழ் மக்களுக்கு ஆதரவானவராக அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றார். ரணில் ஒப்பீட்டடிப்படையில் விடயங்களை உரையாடக் கூடியவர்தான். ஆனால், அவர் எந்தளவு தீர்வு விடயத்தில் உறுதியாக இருப்பார் என்பதில் சந்தேகம் கொள்ளாமல் இருக்க முடியாது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அரசியல் தீர்வு விடயத்தில் போதிய அனுபவங்கள் உண்டு. ஒரு கட்சி ஆதரிப்பதை ஏனைய கட்சிகள் எதிர்ப்பதுதான் இலங்கைத் தீவின் வரலாறு. இந்த நிலையில்,அனைத்து கட்சிகளின் உடன்பாட்டோடுதான் விடயங்கள் செய்யப்பட வேண்டுமென்றால் அதன் சாத்தியம் கேள்விக்கு உரியது. தற்போதுள்ள சூழலில், ஜனாதிபதித் தேர்தலே ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான இலக்காகும். இந்த நிலையில், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக அவர் கூறினாலும்கூட, ஏனைய கட்சிகளை காரணம் காண்பித்து விடயங்களை மீளவும் கிடப்பில் போடவே வாய்ப்புண்டு. இந்தச் சூழலை தமிழ் கட்சிகள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்? தமிழர்களால் விடயங்கள் குழப்பியதாக இருக்கக்கூடாது. ஏனெனில், பொலிஸ் அதிகாரத்தை முன்வைத்து விவாதங்கள் இடம் பெறலாம். இப்போதே, உதயகம்மன்பில அணியினர் பொலிஸ் அதிகாரத்தை நீக்குவதற்கான திருத்தச் சட்டமொன்றை கொண்டுவரப்போவதாகக் கூறுகின்றனர்.
இந்த நிலையில் பொலிஸ் அதிகாரத்தை முன்வைத்து, அனைத்துகடும்போக்கு தரப்புகளும் ஓரணியாகலாம். அவர்கள் எவ்வாறு வேண்டுமானாலும் செயல்படட்டும். அது அவர்களின் பிரச்னை. ஆனால், தமிழ் கட்சிகள் பந்தை ரணிலின் பக்கமாக வீசிவிட்டு அமைதியாக இருப்பதுதான் இன்றைய சூழலை எதிர்கொள்வதற்கு உகந்தது. முதலில் விடயங்களில் சிலவற்றை செய்து காண்பியுங்கள்.
நம்பிக்கையை உறுதிப்படுத்துங்கள். பின்னர், விடயங்களை மேற்கொண்டு முன்னெடுப்போம் என்பதே, தமிழ் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
அதேவேளை, எதிர்கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தளவுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்பதில் சந்தேகம் உண்டு. இந்த விடயங்களை கணிக்காமல் ரணில் விடயங்களை கையாள முற்படவில்லை. புதுடில்லி பயணத்தைத் தொடர்ந்து உடனடியாகவே அனைத்துக் கட்சிகளை அழைக்கின்றார். அதேவேளை அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சூழலையும் ஆராய்கின்றார். இந்தப் பின்புலத்தில் அனைத்து தரப்புகளும் அவர்களுக்குத் தேவை. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவால், அரசியல் தீர்வு விடயத்தில் முன்னோக்கி பயணிக்க முடியுமென்று நம்புவது கடினமானது. ஆனாலும் ரணில் பேசுவதற்கு அழைத்தால் பேசத்தான் வேண்டும் – அதேவேளை 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் தமிழர் தரப்புக்கள் தங்களின் உடன்பாட்டை காண்பிக்கத்தான் வேண்டும். இது ரணிலை நம்புவதா அல்லது இல்லையா என்னும் விடயமல்ல மாறாக, நமக்கு முன்னாலுள்ள சூழலை கையாளுவதா அல்லது இல்லையா என்பதாகும்.