பேருந்துகளில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களுக்கு இடையில் இன்று (8) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் கூறுகையில், ஒரு நாட்டின் வீதி – ஒழுக்கம் என்பது அந்நாட்டின் நிலையை அளவிடும் அளவுகோலாகும். இதன்படி, அரசியல் தலையீடுகள் இன்றி வீதி ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு தற்போதுள்ள சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதில் பொலிஸ் மா அதிபர் புள்ளிவிபரங்களை சமர்ப்பித்து, இந்த நடவடிக்கைகளினால் நாளொன்றுக்கு 4 அல்லது 5 பேர் உயிரிழக்கும் விபத்துக்கள் குறைவடைந்துள்ளதுடன், ஏனைய விபத்துக்களும் கணிசமாகக் குறைந்துள்ளன என தெரிவித்தள்ளார்.
இக்கலந்துரையாடலில், வாகனங்களின் அலங்காரப் பாகங்களை அகற்றுவதற்கு அல்லது சட்டப்பூர்வமாக்குவதற்கு இரண்டு வார கால அவகாசம் போதாது என பேருந்து சங்கங்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
எனவே, மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதற்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர், இந்த நிறுவல்கள் விபத்துக்களை ஏற்படுத்தினால் அல்லது விபத்துக்களின் தன்மையை அதிகரித்தால், பொலிஸாரால் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், இருப்பினும், அத்தகைய சாதனங்கள் இல்லை என்றால், அவை சட்டபூர்வமாக வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் சேர்க்கப்படலாம் அல்லது அவற்றை அகற்றிவிட்டு சட்டத்திற்கு இணங்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படலாம்.
அதேவேளை, இக்கலந்துரையாடலில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை பேருந்தில் ஏற்றி பேருந்து சாரதிகள் செய்யும் குற்றங்கள் தொடர்பில் முடிந்தவரை நடவடிக்கை எடுக்குமாறு பேருந்து சங்கங்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இதன்படி, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.