முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (9) முன்னெடுக்கப்பட்டது.
கையில் பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்பு போராட்டம் முன்னேற்றப்பட்டதுடன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள், கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என இலங்கை அரசிடம் கோரிகை விடுத்தனர்.
அவர்கள் அங்கு கருத்து தெரிவித்ததாவது,
இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கத்துவ நாடாகும். எனவே ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் அவ்வாறே சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மனித உரிமைச்சட்டங்களை சர்வதேச வழக்காற்று சட்டங்கள் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கடப்பாட்டையும் கொண்டுள்ளோம்.
நாடு கடத்தப்படாமை என்பது இந்த அனைத்து சட்டங்களினதும் மையக்கொள்கையாகும் எனவே மனிதாபிமான விழுமியங்களை நிலைநிறுத்துமாறும்,இந்த அகதிகளின் சொந்த இடத்திற்கு அவர்கள் திருப்பி அனுப்பாதிருக்குமாறும் இலங்கை அரசிற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இந்த அகதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அந்த மாவட்டத்தின் சிவில் நிர்வாக கண்காணிப்பு இன்றி தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் இராணுவ மயமாக்கல் சூழலுக்குள் அகதிகளைத் தங்கவைப்பது சர்வதேச மனிதாபிமான நியமங்களுக்கும் அடிப்படை மனிதாபிமான விழுமியங்களுக்கும் மாறானதாகும்.
எனவே இந்த அகதிகளை மீரியானவில் உள்ள அகதிகள் மையத்திற்கு அல்லது வேறொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதுடன் அப்பிரதேச சிவில் நிர்வாக கண்காணிப்புக்குள் அவர்களைக் கொண்டு வரவேண்டும்.
இலங்கை என்பது ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு எனும் வகையில் இலங்கை சர்வதேச அகதிகளின் புகலிடமாக மாறுவதை நாம் விரும்பவில்லை தற்போதுள்ள அகதிகளை சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு அமைய நடத்தவேண்டும் என்பதையே அரசாங்கத்திடம் வேண்டுகின்றோம்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பினை பெறுமாறும், இந்த அகதிகளுக்கு அகதி அந்தஸ்தது வழங்கும் தகமையுடைய நாடுகளிடம் அந்த நாடுகளில் அகதி அந்தஸ்து வழங்குவது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளுமாறும் கோருகின்றோம் என்றும் அவர்களின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையினை பிரதமருக்கும் ,வெளிவிவகார அமைச்சருக்கும் ,ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.