முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீட்டெடுப்பதற்காக வரைந்த பாதையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிப் பீடமேறிய ஜனாதிபதி அநுரகுமார பயணித்துக் கொண்டிருக்கின்றார் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சமகால நிலைமைகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் பல வாக்குறுதிகளை வழங்கினார். மின்சாரக்கட்டணம், எரிபொருள் கட்டணம், அரசி விலை என்று பட்டியல் நீண்டதாக அமைகின்றது.
இதற்கு மேலதிகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டையும் மீளமைப்பதாகவும் வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தியின் அத்தனை உறுப்பினர்களும் அளித்திருந்தார்கள்.
ஆனால் தற்போது அவர்களால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முடிந்திருக்கவில்லை. அவர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீட்டெடுப்பதற்காக வகுத்துக்கொண்ட பொருளாதார மீட்சிப்பதையினையே தெரிவுசெய்துள்ளனர்.
விசேடமாக அநுரகுமார திசாநாயக்க அந்தப் பாதையில் சற்றும் விலகாமல் பயணிக்கின்றார். ஆகவே அநுர தலைமையிலான அரசாங்கத்தினர் பொதுமக்களிடத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டை மீட்டும் திட்டம் சரியானது என்பதை வெளிப்படையாக கூற வேண்டியவர்களாக உள்ளார்கள்.
இந்த விடயத்தில் அரசாங்கத்தின் மனச்சாட்சியுடன் உண்மையான நிலைமைகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
அத்துடன் தாங்கள் ஏலவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பது தான் யதார்த்தம் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.