இலங்கையில் பிறந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி கனேடிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பூர்விக குடிகள் உறவுகள் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் முதன்முதலில் 2015 இல் Scarborough-Rouge Park இன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் கனடாவின் நீதி அமைச்சருக்கும் சட்டமா அதிபருக்கும் நாடாளுமன்றச் செயலாளராகவும், அரச-சுதேச உறவுகள் அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
கல்வி மற்றும் நீதிக்காக அயராது செயற்பட்ட அவர், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.
கனேடிய தமிழ் இளைஞர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவராகவும், கனேடிய தமிழர்களின் வர்த்தக சபையின் தலைவராகவும் கனேடிய தமிழ் காங்கிரஸின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் இளைஞர் சவால் நிதியத்தின் குழு உறுப்பினராகவும், டொராண்டோ காவலதுறைத் தலைவரின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், யுனைடெட் வே நியூகம்ஸ் கிராண்ட் திட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
சமூக சேவை மற்றும் சட்டத்துறை மீதான அவரது பக்தியை போற்றும் வகையில், அமைச்சர் ஆனந்தசங்கரி, இரண்டாம் ராணி எலிசபெத் பொன்விழா பதக்கம் மற்றும் ராணி எலிசபெத் வைர விழா பதக்கம் இரண்டையும் பெற்றுள்ளார்.