ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஒன்லைன் தொழில்நுட்பத்தின் (ONLINE) ஊடாக பொதுமக்களுக்கு சேவைகளை உத்தியோகபூர்வமாக வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், தற்போது 69 உள்ளூராட்சி மன்றங்கள் தமது சேவைகளை ஒன்லைன் தொழில்நுட்பத்தின் (ONLINE) ஊடாக செயற்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர,
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளையும் மேம்படுத்தும் வகையில் தற்போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி பொது மக்களுக்கு ஒன்லைன் (ONLINE) தொழில்நுட்பம் ஊடாக சேவைகளை வழங்க அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடிகள் தவிர்க்கப்படும் என்றும் மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் நிவர்த்திசெய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்