இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் காசாவில் தாங்கள் கைவிட்டுச் சென்ற வீடுகளை நோக்கி மக்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் குண்டுவீச்சுகள் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கியுள்ளது. காசாவில் இருந்த 23 இலட்சம் மக்களில் 19 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
15 மாதங்களாக வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டில் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்த காசா மக்கள் கல்லாகவும் மண்ணாகவும் எஞ்சிய கட்டடங்களை கடந்து சிதிலங்களுக்கு ஊடாக தங்கள் வீடுகளின் எச்சங்களுக்குத் திரும்பத் தொடங்கினர்.
தெருக்களை சுத்தம் செய்து தங்கள் வாழ்வை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியை நம்பிக்கையுடன் காசா மக்கள் தொடங்கியுள்ளனர். ஆனால் சேதங்கள் சரிசெய்யப்பட்டு காசாவில் மீண்டும் இயல்வு வாழ்க்கை திரும்புவது அவ்வளவு எளிதானது அல்ல .
காசாவில் புனரமைப்பு பணிகளை நடத்தி முடிக்க 350 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபை கடந்த மாதம் வெளியிட்ட தரவின்படி, காசாவில் உள்ள 69% கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
சுமார் 2,45,000 வீடுகள் உட்பட பல கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா மதிப்பிட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட லொறிகள் முழுநேர வேலை செய்தாலும், இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.