ராஜபக்சக்களை அரசியலில் இருந்து ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் கடந்த இரண்டு தேசிய தேர்தல்களிலும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றார்கள் என்பது மட்டுமே உண்மை.
ஆனால், அவர்களை அரசியலில் இருந்து ஒருபோதும் வீழ்த்த முடியாது. இதை அநுரவின் கட்சிக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில், அநுரவின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களில் சிலர் அடிப்படை அரசியல் அறிவு தெரியாமல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள்.
அவர்கள் ராஜபக்சக்களின் அரசியல் வரலாற்றை ஒரு தடவை மீட்டுப் பார்க்க வேண்டும்.
சிறுபிள்ளைத்தனமாக அவர்கள் கருத்து வெளியிடுவதால் அவர்களின் கட்சிக்கே அவமானம் என நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசானாயக்க தலைமையிலான அரசாங்கம், இந்திய மற்றும் சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
எனினும் எதிர் தரப்பில் அவர்கள் இருந்தபோது இவ்வாறான ஒப்பச்தங்களை “ஊழல்” என விமர்சித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.