இலங்கையை மதச் சார்பற்ற நாடாக மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேசிய மக்கள் சக்தி இருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகத் தற்போது செயற்படுகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அத்துடன் அரசின் ஒரு சில செயற்பாடுகளால் நாட்டின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கி இந்த அரசு செயற்படாது. புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து தற்போது பேசப்படுகின்றது.
இலங்கையைச் மதச் சார்பற்ற நாடாக மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் இந்த அரசில் முன்னிலை பதவிகளில் உள்ளார்கள். அரசும் அந்த நிலைப்பாட்டில் தான் உள்ளது.
மாற்றத்துக்காகவே மக்கள் புதியவர்களைத் தெரிவு செய்தார்கள். ஆனால், புதியவர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி எவ்விடத்திலும் பேசுவதில்லை. அவர்களைத் தெரிவுசெய்ததன் பயனை மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதிகாரத்தில் இருக்கும்போதும் இல்லாத போதும் மக்களின் பிரச்சினைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.
தேசியத்தைப் பாதுகாத்தால் மாத்திரமே இலங்கை என்ற அடிப்படையில் முன்னேற முடியும். தேசியத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் நாம் ஈடுபடவுள்ளோம். கடந்த காலங்களைக் காட்டிலும் இனி உத்வேகத்துடன் செயற்படுவோம்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகத் தற்போது செயற்படுகின்றது. ஆகவே இந்த அரசுக்குக் கடந்த காலத்தை நினைவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது என தெரிவித்தார்.