பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், கருத்து கூற இன்றே கடைசி நாளாகும்.
பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்த மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இதனால் கடந்த சில காலமாகவே பொது சிவில் சட்டம் குறித்தே பேசப்பட்டு வருகிறது. அதாவது இப்போது நமது நாட்டில் அனைத்து வித கிரிமினல் வழக்குகளுக்கும் ஒரே சட்டம் உள்ளது
ஆனால், சிவில் சட்டங்கள் அப்படி இல்லை. சிவில் சட்டங்கள் என்பது மதங்களைப் பொறுத்து மாறுகிறது. அதாவது திருமணம், குழந்தை தத்து கொடுப்பது, விவகாரத்து உள்ளிட்ட விஷயங்களில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையை மாற்றி நாடு முழுக்க “ஒரே பொது சிவில் சட்டம்” கொண்டு வர வேண்டும் என்பதை ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை பாஜக தனது தேர்தல் அறிக்கையாகவே கூறியிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிப் பல முக்கிய பாஜக தலைவர்களும் பொது சிவில் சட்டம் குறித்தே பேசி வருகின்றனர்.
கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, நாட்டிற்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்பதை வலியுறுத்தினார். மேலும், இந்தியாவிற்கு இப்போது தேவை பொது சிவில் சட்டம் என்று கூறிய அவர், ஒரு நாடு எப்படி இரண்டு வேறு வேறு சட்டங்களைக் கொண்டு இயங்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இருப்பினும், மற்றொரு தரப்பினர் பொது சிவில் சட்டம் தேவையற்றது என எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க உள்ளதாக மத்திய அரசு கடந்த மாதம் 14ஆம் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்த பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். ஜூலை 14ஆம் தேதி வரையில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.
ஜூலை 14ஆம் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அதற்கான கால அவகாசம் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டு ஜூலை 28 வரை கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி பலரும் பொது சிவில் சட்டம் குறித்து கருத்துகளைத் தெரிவித்த நிலையில், இதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. பொது சிவில் சட்டம் குறித்து கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் இன்று கருத்துகளைத் தெரிவிக்கலாம்.