கொழும்பு தேசிய சிறுநீரக வைத்தியசாலை உட்பட நாடு பூராகவும் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதால் எதிர்வரும் தினங்களில் சிறுநீரக சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தப்படும் அபாயம் உள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அழுத்கே தெரிவித்தார்.
சிறுநீரக வைத்தியசாலைகளில் ஏற்பட்டுவரும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு தேசிய சிறுநீரக வைத்தியசாலை அடங்கலாக நாடு பூராகவும் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதால் எதிர்வரும் தினங்களில் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தப்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்த வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் முன்னர் நோயாளியை தயார்ப்படுத்துவதற்காக பெசிலிக்சிமெப் மற்றும் ஏ.டீ.ஜி. என்ற இரண்டு மருந்துகள் வழங்கப்பட வேண்டும்.
தற்போது இந்த இரண்டு வகை மருந்துகளும் வைத்தியசாலைகளில் கைவசம் இல்லை. இந்த மருந்துகள் இல்லாவிட்டால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது.
அத்துடன் அவசர தேவை கருதி தனியார் துறைகளில் இருந்து பெற்றுக்கொள்ளவும் இந்த மருந்து தற்போது அங்கும் இல்லை என்றே தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் நோயாளிகள் இந்த மருந்தை அவர்கள் கொள்வனவு செய்வதாக இருந்தால் பெசிலிக்சிமெப் மருந்துக்கு சுமார் 3 இலட்சம் ரூபாய் வரை செலவாகும். ஏ.டீ.ஜி. மருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.
மேலும், மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்த வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக திகதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் மற்றும் சிறுநீரகம் வழங்க இருப்பவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த மருந்து தொகையை உரிய முறையில் பாதுகாத்துக்கொண்டு செல்ல முடியாமல் போனதன் காரணமாக சுகாதார அதிகாரிகள் அவசர மருந்து கொள்வனவுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
மருந்துப் பொருட்கள் அவசர கொள்வனவின்போது இரண்டு இலட்சம் ரூபாய் மருந்தை 20 இலட்சம் அல்லது 30 இலட்சம் ரூபாவுக்கே கொள்வனவு செய்ய முடியுமாகிறது என்றார்.