வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்றதற்காக 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 21 ரயில் டிக்கெட்டுகள், மோசடி மூலம் சம்பாதித்த ரூ. 130,670 பணம், 130 பதிவு புத்தகங்கள் மற்றும் ஒரு தொலைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் நேற்று கண்டியில் உள்ள சுதுஹும்பொல பகுதியில் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம், போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன, ஒன்லைன் டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்த பிறகு, எல்லவிற்கான ரயில் சேவைகளுக்கான ரயில் டிக்கெட்டுகள் தொடர்பான பெரிய அளவிலான மோசடி குறித்து கவலை தெரிவித்தார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாற்றிய துணை அமைச்சர், இந்த மோசடி குறித்த தகவல்களை வெளியிட்டார், குற்றப் புலனாய்வுத் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அனைத்து ஒன்லைன் டிக்கெட்டுகளையும் உடனடியாக வாங்கும் குழுக்கள் பின்னர் ரூ. 2,000 மதிப்புள்ள டிக்கெட்டை 16,000 ரூபாவுக்கு வெளிநாட்டினருக்கு விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
கொழும்பு-கோட்டை, கண்டி மற்றும் எல்ல ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்கும் மோசடி நடத்தப்படுவதாகக் கூறிய அவர், ரயில் நிலைய வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகள் இதற்கு ஆதரவளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.