மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்து வந்த அம்மன் பீடம் உள்ள காணியை மட்டு மாநகர சபையினர் தனியார் ஒருவருக்கு மீன்வாடி அமைக்க முறைகேடாக வழங்கிய நிலையில், அங்கிருந்து அவரை வெயியேறுமாறு கடந்தமாதம் மாட்ட அபிவிருத்திக்குழு மற்றும் மனித உரிமை ஆணையம் கட்டளையிட்டும் அவர் அங்கிருந்து வெளியேறாமல் உள்ளதாக பொதுமக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
பார்வீதியில் செழியன் பூங்காவிற்கு அருகில் கடற்கரை பகுதியில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காணியை மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய நிர்வாகம் 50 வருடத்துக்கு மேலாக சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் காணி அபகரிப்பில் இருந்து பாதுகாத்து, ஆலய உற்சவ காலங்களில் புனித மஞ்சல் நீராடுதலும், கும்பஞ் சொரிதல் போன்ற புனித காரியங்களுக்காக பயன்படுத்தி வந்ததுடன் அங்கு வேல் நாட்டப்பட்டு அம்மன் பீடம் அமைக்கப்பட்டு வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த காணியை கடந்த வருடம் 2024 ம் ஆண்டு மட்டு மாநகர ஆணையாளர் அந்த காணி மாநகர சபைக்கு உட்பட்டது என போலியான ஆவணங்களை தயாரித்து இந்த காணியை யாரோனும் பன்படுத்துகின்றீர்களா என கிராம சேவகரிடமே, பொது அமைப்புகளிடமே, கிராம மக்களிடமே கேட்டறியாது பிரதேச செயலாளரின் அனுமதியின்றி இந்து மக்களின் புனித தன்மையை இழிவுபடுத்தி மீன்பிடி உரிமையாளர் ஒருவருக்கு மீன்வாடி அமைக்க குத்தகைக்கு வழங்கியுள்ளார்
இது தொடர்பாக ஆலைய நிர்வாகம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டதையடுத்து, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அரச காணியை மாநகர சபையினர் முறைகேடாக குத்ததைக்கு வழங்கியுள்ளதாகவும், மீன்வாடியை அங்கிருந்து அகற்றுமாறு தெரிவித்திருந்தனர். அதேபோல் கடந்த 10 ம் திகதி இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் இந்த மீன்வாடியை அகற்றுமாறு தீர்மானிக்கப்பட்டது.
இருந்தபோதும் இந்த இரு தீர்மானங்களை குறித்த அரச திணைக்களம் மீன்வாடியை அகற்றும் செயற்பாட்டை இன்றுவரை செய்யாமல் உள்ளனர். எனவே இது இந்து மதத்திற்கும், மக்களுக்கும் செய்யும் அநீதி என ஆலய பரிபாலன சபை மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.