அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் அலுவலக செயற்பாடுகளுக்காக வழங்கவேண்டிய வாகனங்களின் எண்ணிக்கை, வாகனங்களுக்கான எரிபொருள் செலவு, தொலைபேசிகளின் எண்ணிக்கை, தொலைபேசிகளுக்கான கட்டணங்கள் மற்றும் அவர்களின் பணிக்குழாமுக்கு நியமிக்கப்படக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கான சலுகைகள் என்பவற்றை மட்டுப்படுத்த ஜனாதிபதி செயலகம் திடீர் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான ஆலோசனைகள் அடங்கிய சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்கவினால் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சகல வரையறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டியது அமைச்சுகள் செயலாளர்களின் பொறுப்பு என்பதுடன் சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகளுக்கமைய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் அலுவலகம், அமைச்சரவை ஆலோசனைக் குழு மற்றும் அமைச்சர்களின் பிரதி அமைச்சர்களின் உதவி பணியாளர் குழாம் என்பவற்றை உடனடியாக ஸ்தாபித்து அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளரினால் கடந்த 21ஆம் திகதி அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
அந்த சுற்றறிக்கையின் பிரகாரம் அமைச்சர்களின் பணிக்குழாம் அதிகாரிகளின் எண்ணிக்கை 15 ஆகவும், பிரதி அமைச்சர்களின் பணிகுழாம் அதிகாரிகளின் எண்ணிக்கை 12 ஆகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, அமைச்சர்களுக்கு இரு வாகனங்கள் மாத்திரமே வழங்கப்படும் என்பதுடன் மாதாந்தம் 900 லீற்றர் எரிபொருளுக்கான நிதி மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒரு தொலைநகல் உட்பட நான்கு தொலைபேசிகள் மாத்திரமே வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி செயலாளர் அமைச்சுகளுக்கு அறிவித்திருக்கிறார்.
இந்த சுற்றறிக்கையில் மேலும்,
தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது வளமான நாடு – அழகிய வாழ்க்கை என்ற கொள்கைப் பிரகடனத்திலுள்ள உள்ளடக்கங்களை நடைமுறைத் திட்டங்களினூடாக அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது அரச உத்தியோகத்தர்களின் கடமையும் பொறுப்புமாகும். தமது அனுபவத்தையும் திறமையையும் நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொடுப்பதற்கு முன்னிலையாகியுள்ள நிபுணர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் அனுபவம் கொண்ட நபர்களை ஆட்சி வியூகத்துக்குள் இணைத்துக்கொள்வதனூடாக மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை விரைவில் அடைந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
அதற்கமைய, அமைச்சுகளுக்கான ஆலோசகர்களை நியமித்தல் மற்றும் விசேட ஆலோசகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அமைச்சின் செயலாளர்களின் கடமையாகும். மேலும், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அவர்களின் பணிகளை மிகவும் வினைத்திறனாகவும் சகலத் தரப்பினருடனும் மிக இணைந்து முன்னெடுத்துச் செல்வதற்காக உதவி பணியாளர் சபையை நியமிக்க வேண்டும். அந்தப் பணியாள் பிரிவின் பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச எண்ணிக்கைக்கு அப்பால் நியமிக்கப்படக் கூடாது.
அதற்கமைய, அமைச்சர் ஒருவருக்காக பிரத்தியேக செயலாளர் ஒருவர், இணைப்புச் செயலாளர்கள் இருவர், ஊடகச் செயலாளர் ஒருவர், பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி ஒருவர், பிரத்தியேக உதவியாளர் ஒருவர், முகாமைத்துவ உதவியாளர்கள் ஐவர், அலுவலக பணிகளுக்கான உதவியாளர்கள் இருவர், சாரதிகள் இருவர் உள்ளடங்களாக மொத்தமாக 15 பணியாளர்களை மாத்திரமே நியமிக்க முடியும்.
அதேபோன்று, பிரதி அமைச்சர் ஒருவருக்கு பிரத்தியேக செயலாளர் ஒருவர், இணைப்புச் செயலாளர்கள் இருவர், ஊடகச் செயலாளர் ஒருவர், பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி ஒருவர், முகாமைத்துவ உதவியாளர்கள் மூவர், அலுவலகப் பணிகளுக்கான உதவியாளர்கள் இருவர், சாரதிகள் இருவர் உள்ளடங்களாக மொத்தமாக 12 பணியாளர்களை மாத்திரமே நியமிக்க முடியும்.
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பாவனைக்காக அதிகப்பட்சம் இரு உத்தியோகப்பூர்வ வாகனங்களையே வழங்கமுடியும். அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பாவனைக்காக அரச கூட்டுத்தாபனங்கள், சட்டபூர்வ நிறுவனங்கள் அல்லது அரச நிறுவனங்களின் வாகனங்களை பயன்படுத்துதல் அல்லது தனியார் மூலமாக வாடகையின் அடிப்படையில் வாகனங்களை பெற்றுக்கொள்வதென்றால், அதற்கான பொறுப்பை அமைச்சின் செயலாளர் ஏற்கவேண்டும்.
தனியார் மூலமாக வாடகைக்கு வாகனங்களை பெற்றுக்கொள்ளும்போது அதற்கான செலவு அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீட்டு எல்லைக்குள் உள்ளடங்கும் வகையில் பேணுவதற்கு பிரதான கணக்கறிக்கையாளர் என்ற அடிப்படையில் அமைச்சின் செயலாளரே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ வாகனம் அல்லது வாகனங்களுக்காக ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 900 லீற்றர் எரிபொருளுக்கான தொகையே ஒதுக்கீடு செய்யப்படும். மேற்குறிப்பிட்ட பிரத்தியேக செயலாளர், இணைப்புச் செயலாளர், ஊடகச் செயலாளர், பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி ஆகியோருக்கு ஒரு உத்தியோகப்பூர்வ வாகனத்துக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்படும்.
அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிகப்பட்ச உத்தியோகபூர்வ கடமைக்கான தொலைபேசிகளுக்கும் மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அலுவலக செயற்பாடுகளுக்கு இரு தொலைபேசி, வீட்டுக்கு ஒரு தொலைபேசி, கைபேசி ஒன்று, அலுவலக தொலைநகல் ஒன்று என்ற அடிப்படையிலேயே விநியோகிக்கப்பட வேண்டும்.
மேலும், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பணிகுழாமிலுள்ள பிரத்தியேக செயலாளருக்கு ஒரு அலுவலக தொலைபேசியும் ஒரு கைபேசியும் ஒரு அலுவலக தொலைநகலும் வழங்கப்பட வேண்டும். இணைச் செயலாளர் ஒருவருக்கு ஒரு அலுவலக தொலைபேசி, ஒரு கைபேசி என்ற அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் ஊடகச் செயலாளர் ஒருவருக்கு அலுவலக தொலைபேசி ஒன்று, கைபேசி ஒன்று மற்றும் அலுவலக தொலைநகல் ஒன்றும் வழங்கப்படுதல் அவசியம். அத்துடன் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரிக்கு ஒரு அலுவலக தொலைபேசியும் கைபேசியொன்றும் விநியோகிக்கப்படுதல் அவசியமாகும்.
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான தொலைபேசிகளுக்கான மாதாந்த நிலையான கட்டணம் வரிப்பணம் இல்லாமல் 10,000 – 20,000 ரூபாவுக்குள் அமைய வேண்டும். அலுவலக மற்றும் இல்ல தொலைபேசிகளுக்கான மாதாந்தம் 20,000 ரூபாவும் கைபேசிகளுக்காக 10,000 ரூபாவும் என்ற வரையறைக்குள் மாத்திரமே பயன்படுத்த முடியும்.
அதேபோன்று, அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பணிக்குழாமிலுள்ள பிரத்தியேக செயலாளர்களின் தொலைபேசிக் கட்டணம் 6,000 ரூபாவாகவும் இணைப்புச் செயலாளருக்கான தொலைபேசிக் கட்டணம் 5,000 ரூபாவும் ஊடகச் செயலாளரின் தொலைபேசிக் கட்டணம் 5,000 ரூபாவும் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரியின் தொலைபேசிக் கட்டணம் 5,000 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த தொகையை விட குறைந்த கட்டணம் தொலைபேசி பாவனைக்கு பயன்படுத்தப்பட்டிருக்குமாக இருந்தால் தொலைபேசிக் கட்டணத்துக்காக அதிக செலவு செய்யப்பட்டுள்ள மாதத்துக்கான கணக்குகளில் கழிக்கப்படும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சுற்றறிக்கையின் பிரதியானது பிரதமர், செயலாளர், அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், கணக்காய்வாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.