புரட்டாசி மாதத்துக்குள் கிழக்கு மாகாணம் முழுவதும் தெரிவு செய்யப்பட்ட முக்கிய இடங்களில் புதிதாக 10 சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சதொச விற்பனை நிலயங்களின் முகாமையாளர்களுடனான முக்கிய கலந்துரையாடல் இன்று (28) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றிருந்தது. அங்கு கலந்து கொண்டிருந்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு ,அம்பாறை,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பல சதொச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டது ஒரு துர்பாக்கிய நிலை அதுமட்டும் அல்லாது கிழக்கு மாகாணம் முழுவதும் குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பில் 15 சதொச நிலையங்களும்,திருமலையில் 03 சதொச விற்பனை நிலையங்களுமே காணப்படுகிறன . இது முற்று முழுதாக சில குறுகிய அரசியல் நோக்கங்கள் கொண்டவர்களாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது அல்லாது விட்டால் மிகவும் குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் சதொச விற்பனை நிலையங்கள் குறைந்த அளவில் காணப்படுமா என்று கேள்வி எழும்பிய அமைச்சர், இதற்கு ஒரு சரியான தீர்வாக களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, ஆரையம்பதி,வாழைச்சேனை,வாகரை ஆகிய பிரதேசங்களில் வரும் புரட்டாசி மாதத்திற்குள் 10 சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாகவும்,அதற்கான வேலை இன்றிலிருந்தே ஆரம்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதேசமயம் அமைச்சர் நளின் பெர்னாண்டோ அவர்கள் வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால் அவர் நாடு திரும்பும் வரை வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் எம்.பி அவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.