மட்டக்களப்பு ஏறாவூரில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (24) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
அம்பாறை மாவட்டதிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 10 வயது சிறுமி தாய், தந்தை கைவிடப்பட்ட நிலையில் சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.
இதனடிப்படையில், இந்த சிறுமி சம்பவதினமான நேற்று(24) அருகிலுள்ள பாடசாலைக்கு சென்று பாடசாலை முடிந்தும் பகல் 2.00 மணியாகியும் மீண்டும் இல்லத்துக்கு திரும்பாததையடுத்து நன்னடத்தை உத்தியோகத்தர்கள் அவரை தேடி பாடசாலைக்கு சென்றபோது அவர் அங்கிருந்து காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து, சிறுமி அவரது நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளார் என கண்டறிந்த அதிகாரிகள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
இதன்போது, குறித்த நண்பியுடைய தந்தை வீட்டில் தனித்திருந்துள்ளதுடன், சிறுமியை தாகாத முறைக்கு உட்படுத்த முயன்றதாகவும், இதனையடுத்து சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்னர் சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டதுடன், சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.