செம்மணியில் ஆரம்பித்து கொக்குதொடுவாய் வரை நீண்டு செல்லும் மனிதப் புதைகுழிகள் யாவும் சர்வதேசத்தினுடைய கண்காணிப்பிலே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்படி கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
மேலும் கூறுகையில்,முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோர கிராமமான கொக்குதொடுவாய் பிரதேசத்தில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி 131 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படுகொலைக்கு பின்னர் அந்தப் பிரதேசங்களில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்களிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டு இறுதி யுத்தத்தின் பின்னர் 28வருடங்களுக்கு பின்னர் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதன் இறுதிக் கட்டத்திலேயே அந்த மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் குறித்த பிரதேசம் இராணுவத்தினருடைய முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இந்த புதைகுழிகள் உருவாகி இருக்க வேண்டும்.
வடக்கிலே வடக்கு கிழக்கிலே பல்வேறு இடங்களிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ளனர்.
செம்மணியில் ஆரம்பித்த மனித புதைகுழியானது இன்று கொக்குதொடுவாய் வரை நீண்டு செல்கின்றது.
ஆகவே இவ்வாறான மனிதப் புதைகுழிகள் யாவும் ஒரு சர்வதேச கண்காணிப்பில் கீழ் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறித்த அமைப்பினால் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.