ஆரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல மற்றும் சிங்கள திரைப்பட நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
குறித்த இருவர் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரதிவாதிகளக குறிப்பிடப்பட்டுள்ள இருவரும் உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின் 190வது பிரிவின் கீழ் வரிச் சட்டம் தொடர்பான குற்றங்களைச் செய்துள்ளார்களா என்பதை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்ககோரி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மேலதிக நீதவான், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
மேலும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்களைச் சரிபார்க்க இருவரின் வீடுகளையும் சோதனை செய்வதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சோதனையின் போது இருவரும் வீடுகளில் இல்லை என்று நீதிமன்றிற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.