தமிழர் பாரம்பரிய தைப் பொங்கல் விழா நேற்று (04) நாசீவன் தீவு கிராமத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய கலாச்சார முறைப்படி நிகழ்வுகள் நடைபெற்றது.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாசீவன் தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஆலயங்கள்.கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து நடாத்தினார்கள்.
பிரதேச செயலகத்தின் 12 கிராமசேவகர் பிரிவுகளை குறிக்கும் வகையில் 12 பொங்கல் பானைகளில் பொங்கல் இட்டு பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் பொங்கல் விழா இடம்பெற்றது.
கலாசார பண்பாட்டு ஊர்வலமும் மாட்டு வண்டி பவனியும் நாசிவன் தீவு ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் இருந்து ஆராம்பமாகி பின்னர் நாசிவன் தீவு கோபாலசிங்கம் வயல் காணியில் பாரம்பரிய முறைப்படி நெல் அறுவடை செய்யப்பட்டு எடுத்துவரப்பட்டு பாரம்பரிய முறைப்படி நெல் குத்தப்பட்டு புத்தரிசி எடுக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டது.
நாசிவன் தீவு பொதுமைதானத்தில் பல்வேற கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றது.நந்தி கொடி ஏற்றப்பட்டு கொடிக்கவி இசைத்தல், தமிழ் மொழி வாழ்த்து,மங்கள விளக்கேற்றல் இறைவணக்கம் என்பவற்றுடன் கலை அரங்கில் கிராமிய குழு நடனங்கள், சிறப்பு சொற்பொழிவு பரத நாட்டியம், கிராமிய பாடல் கவிதை நாட்டுக் கூத்து கும்மி போன்ற கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், பிரதி திட்டமிடல் பணிப்பாள் ஆர்.கங்காதரன்,கணக்காளர் திருமதி தயானி சசிகுமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.