நுகர்வோர் அதிகாரசபை இந்த நாட்களில் பொருட்களின் விலை காட்சிப்படுத்தப்படாமை தொடர்பான சட்டத்தை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின்படி, விற்பனைக்கான ஒவ்வொரு பொருளின் விலையும் குறிக்கப்பட வேண்டும் அல்லது காட்சிப்படுத்தப்படும் வேண்டும் என்பது சட்டமாக காணப்படுகிறது.
ஆனால் சந்தையை அவதானிக்கும் போது இது முறையாக மேற்கொள்ளப்படாததால் பல்வேறு விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, கோதுமை மா பொதிகளின் விலை குறிப்பிடப்படாதது தொடர்பில், நாட்டின் பிரதான கோதுமை மா நிறுவனங்களான Prima மற்றும் Serendib ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவு தேவையான சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனைகளின் போது கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி நுகர்வோர் அதிகாரசபை சட்டத்தின்படி பெரிய அளவிலான வர்த்தக நிலையங்கள் முதல் சிறிய கடைகள் வரை ஒவ்வொரு இடத்திலும் விற்பனைக்கு வைக்கப்படும் ஒவ்வொரு பொருளின் விலையையும் குறிக்க வேண்டும் அல்லது காட்சிப்படுத்துவது கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ளார்.