பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட இந்த குழு, சிரேஸ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரியவின் தலைமையில் செயற்படும்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஜயனி வெகடபொல மற்றும் அரசாங்க சட்டத்தரணி சக்தி ஜகொடஆராச்சி ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்த விடயங்களை இந்தக் குழு ஆய்வு செய்யும்.

காலக்கெடு விதிக்கப்பட்ட ஏதேனும் தவறுகளை அடையாளம் காண்பதும் குழுவின் பொறுப்பாகும். மேலும் விசாரணை தேவைப்படும் விடயங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை அடையாளம் காணும் பணியும் இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், ஜனாதிபதி செயலகத்தால் சமீபத்தில் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டது.

இந்த அறிக்கை தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.