முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அதன் தலைவர் மாதலி ஜெயசேகர இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் கால்நடை தீவனமாக மக்காச்சோளத்தை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு முட்டையின் விலை 26 ரூபா முதல் 30 ரூபா வரையிலும் கோழி இறைச்சி கிலோகிராம் ஒன்றின் விலை 650 ரூபா முதல் 850 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
அத்துடன் முட்டை மற்றும் கோழி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் தேவை குறைந்ததாலும் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.