இலங்கையின் பிரதான மருத்துவமனைகள் உள்ளிட்ட பெரும்பாலான மருத்துவமனைகளில் ஒரு சில மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவது தெரியவந்துள்ளது.
குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரோல் போன்ற வியாதிகளுக்கு வழங்கப்படும் மெட்போமின், இன்சியூலின், கொலஸ்ட்ரோல் மாத்திரை போன்றவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக பெரும்பாலான நோயாளிகள் அவற்றை தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-509.png)
அத்துடன் ஒருசில மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்படவுள்ள நோயாளிகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்களையும் வெளியில் இருந்து வாங்கி வருமாறு கூறப்படுவதாகவும் நோயாளிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக இலாஸ்டோ பிளாஸ்டர், கெனியூலா, குறிப்பு புத்தகங்கள் போன்றவற்றைக் கூட நோயாளிகள் வெளியில் இருந்து வாங்கி வருமாறு சில மருத்துவமனைகளில் அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் சுகாதார அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வழங்கியுள்ள நிலையில், அது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.