நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியன் ரூபா நிதியில் குளத்தை விளையாட்டு மைதானம் எனவும், பதிவு செய்யப்படாத பல இடங்களுக்கு நிதி ஓதுக்கப்பட்டு நிர்மாணப்பணி முடியாமல் முடிவுற்றதாக பணம் பெறப்பட்டு, பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.
எனவே இதற்கு விசாரணைக்குழு ஒன்றை நியமித்து, இதில் தவறிழைத்த அரச அதிகாரிகள் அத்தனை பேரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனி சில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) காரியாலயத்தில் கடந்த (13) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 மில்லியன் ரூபா ஓதுக்கீடு செய்தார். இதில் அரச அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பெரும்பாலான நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி எருவில் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு 50 இலச்சம் ரூபா ஒதுக்கப்பட்டு, மைதானம் பூர்த்தி செய்யப்பட்டு, அதற்கான முழு பணமும் வழங்கியுள்ளதாக தகவல் அறியும் சட்டதின் ஊடாக காட்டப்படுகின்ற இடத்தை தேடி களவிஜயம் செய்தோம். அது கோடைமேடு சிறுப்பிட்டிக்குளம். அந்த குளத்தில் மீனவர் ஒருவர் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம்.
ஏனெனில் அது ஒரு விளையாட்டு மைதானம் அல்ல. அது ஒரு அரசகுளம். அதற்கு 50 இலச்சம் ரூபாவை ஒதுக்கி விளையாட்டு மைதானம் என காட்டுகின்றனர். இது போன்று பல விடையங்கள் இருக்கின்றன அதில் கோட்டை கல்லாற்றிலே கூட்டுறவுக்கு சொந்தமான கட்டிடம் புனர்நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக 50 இலச்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடமும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றது.

இவ்வாறு பல இடங்களுக்கு சென்று பார்த்தால் அரச அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக இந்த வேலைத்திட்டங்கள் அரையும் குறையுமாக இருக்கின்றது. ஆனால் தகவல் அறியும் சட்டம் மூலமாக பெறப்பட்ட ஆவணங்களிலே அனைத்து திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் அதற்கான முழு பணமும் வழங்கப்பட்டதாக காட்டப்பட்டுகின்றது.
எந்தவிதமான திட்டமிடலும் இன்றி பதிவு இலக்கம் இல்லாது அதாவது ஜனாதிபதியின் செயலக சுற்று நிருபத்துக்கு அமைய பதிவு செய்யப்பட்டமைக்கு வழங்கப்படவேண்டும். ஆனால் அது குளம் என தெரிந்தும் யார் இதை மைதானம் என சென்று பார்வையிடார்?
மைதானத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை எடுத்த கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்கு இது ஒரு குளம் என தெதியவில்லையா ? இதை மேற்பார்வை செய்த அரச உத்தியோகத்தர் யார்? பதிவு இலக்கத்தை பார்வையிடாது இந்த அரச அதிகாரிகள் ஏன் இந்த 50 இலச்சம் ரூபா நிதியை வழங்க சம்மதித்தனர்.
இது அரச அதிகாரிகளினது கவனயீனம் காரணமாக மக்களுடைய வரிப்பணமான 50 இலச்சம் ரூபாவீணடிக்கப்பட்டு, மோசடி இடம்பெற்றுள்ளது.

இதுமட்டுமல்ல இவ்வாறு எங்கெல்லாம் ஒதுக்கப்பட்டதே அங்கெல்லாம் நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது. இந்த அரச அதிகாரிகள் சரியான முறையில் கையாளவில்லை. அதனால் தான் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்ட நிதியும் வீணடிக்கப்பட்டதாக கருதுகின்றோம்.
எனவே எதிர்காலத்தில் இவ்வாறான நிதி ஓதுக்கிடும் போது அரச அதிகாரிகள் மிகவும் கவனமாக செயற்பட்டு, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அபிவிருத்திக்கு வருகின்ற பணத்தை தேவை தெரிந்து அத்தியாவசிய தேவைகள், வாழ்வாதார திட்டங்களை ஊக்கிவிக்க வேண்டும் என அரச அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம்.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் வெளிநாட்டு பிரதி அமைச்சருமான அருன் ஹேமச்சந்திராவிடம் வேண்டிக் கொள்வது, இந்த நிதி ஒதுக்கீட்டில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளது.

அது மட்டுமல்ல பதிவு செய்யப்படாத இடங்களுக்கு நிதிகள் வழங்கப்பட்டு இந்த 400 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிலே அரச அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக முற்று முழுதாக வீணடிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக விசாரணைக்குழு ஒன்றை நியமித்து, துரித விசாரணைகளை மேற்கொண்டு இதில் தவறிழைத்த அரச அதிகாரிகள் அத்தனை பேரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

