நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தற்போதைய நாட்களில் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் ஆலோசனைகள் வழங்கப்படுமாயின் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “ தற்போதைய சூழ்நிலை தொடர்பில் நாளைய தினம் (17) கலந்துரையாடல் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவையேற்படின் பாடசாலை அதிபர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிக சூரிய ஒளியில் இருப்பதனை தவிர்க்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உட்பட உலகின் மத்திய ரேகை பகுதியில் உள்ள பல நாடுகளில் தற்போதைய நாட்களில் அதிக வெப்பநிலை நிலவுகிறது.

அதன்படி, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளும் அதிக வெப்பநிலையினால் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், கொழும்பு, காலி, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வெப்பநிலையானது எதிர்வரும் நாட்களில் 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலையினால் உடல் வெப்பநிலை அதிகரித்து பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படக்கூடும் என்பதால் அதிகளவில் நீர் அல்லது இயற்கை பானங்களை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.