இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கை பூராகவும் ஆரம்பிக்கப்படவுள்ள “சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்வு நேற்றைய தினம் கிழக்கு மாகாணம் பூராகவும் கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஐயந்தலால் ரட்ணசேகர அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய இடம் பெற்றது.
அதன் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையை அண்மித்த 23 பிரதேசங்களில் சுத்தம் செய்யும் வேலை திட்டம் நேற்றய தினம் (16) நடை பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வானது மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா யுலேகா முரளிதரன் தலைமையில் இடம் பெற்றது.
மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்களான சுதர்சனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி), மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் சுபா சதாகரன், கிளீன் ஸ்ரீலங்கா திட்ட பிரதிநிதிகள், சுற்றுலாத்துறை உத்தியோகத்தர்கள், முப்படையினர், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மீனவ சங்கங்கள், இலங்கை சென்சிலுவை சங்கம், இளைஞர் சம்மேளனம் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்பில் நடை பெற்றது.


