கொழும்பு இராணுவத் தலைமையகத்திற்கு முன்னால், ஜனவரி 25, 2006 அன்று நடத்தப்பட்ட, அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக, சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஜெனரல் சரத் பொன்சேகாவை கொலை செய்யும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கருதப்படும் துர்கா எனும் பெண் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் குறித்த வழக்கை வழக்குத் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயன்ற தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகம் தலை அருகிலுள்ள மரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும், அவரது கால்கள் வேறு இடத்தில் கிடந்ததாகவும், கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ பரிசோதகர் கே. சுனில் குமார நேற்று(17) நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், குண்டுதாரி உடலின் எனைய பாகங்கள் வேறு இடங்களில் சிதறிக்கிடப்பதாக சாட்சியம் அளித்துள்ளார்.
குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் சரத் பொன்சேகா படுகாயமடைந்தார், என்றும், மேலும் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் அவரைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட மூன்று இராணுவ வீரர்கள் உட்பட பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் முக்கிய குற்றவாளியான செல்வராசா கிருபாகரன் (மொரிஸ் ஷம்முகலிங்கம் சூரியகுமார்) சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், சட்டத்தரணிகளான சுரங்க பண்டார, லத்திகா தேவேந்திரா மற்றும் அர்னால்ட் பிரியந்தன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழு பிரதிவாதி சார்பாக முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகிறது.