அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை மறுசீரமைப்பதில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்கள் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதன்படி, அமெரிக்காவின் வெளிநாட்டு உதவியின் உலகளாவிய மதிப்பாய்வு மற்றும் மறுசீரமைப்பை தூதர் வரவேற்றுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய நலனை முன்னேற்றுவதற்காகவே வெளிநாட்டு உதவி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வெளியுறவு செயலாளராக இருக்கும் வரை மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கும் வரை செலவிடப்படும் ஒவ்வொரு டொலரும் அமெரிக்க தேசிய நலன்களை முன்னேற்றும் டொலராக இருக்கும் என்றும் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளதாக தூதுவர் சங் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேசமயம் அமெரிக்கா, வெளிநாட்டு உதவிகளை ஒழிக்கப் போவதில்லை, ஆனால் அர்த்தமுள்ள வெளிநாட்டு உதவிகளை வழங்கப் போகிறது, என்றும் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறியதாக தூதர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் இருப்பதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.