கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் விமலசேன லவகுமாரை நாளையத்தினம் (20) காலை 9 மணியளவில் வாக்குமூலம் ஒன்றை வழங்க மட்டு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சமூக ஆர்வலரான விமலசேன லவகுமார் தெரிவிக்கையில்,
கடந்த 2021.05.18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்த பொழுது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 06 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டேன்.

2021.12.08 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டு, 2022.03.25 ஆம் திகதி சட்டமா அதிபரிடத்திலிருந்து வந்த அலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கிலிருந்து விடுதலையானேன்.
இவற்றையும் கடந்து சென்றவருடமும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.
இந்தநிலையில் இன்று மீண்டும் வாழைச்சேனை பொலிஸாரினால் (2025.02.20) நாளை மட்டக்களப்பு பயங்கரவாத ஒழிப்பு பிரிவில் வாக்குமூலம் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளேன்.

அரசாங்கங்கள் மாறிக்கொண்டு செல்கின்றது, நாட்டின் ஜனாதிபதிகள் மாறுகின்றனர். இருந்தும் நாங்கள் அமைதியாக வாழ்ந்தாலும் எங்களை அச்சுறுத்தும் வண்ணம் செயற்படும் இவர்களின் செயற்பாடுகள் மட்டும் இன்னும் மாறவில்லை என மேலும் தெரிவித்தார்.