மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்பினர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நேற்று (20) இடம் பெற்றது.
மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு துறைசார் நிபுணர்களினால் உருவாக்கப்பட விவசாய நாட்காட்டி மூலம் செயற்படுவதனால் சிறந்த விளைச்சளை பெற்றுக்கொள்வதற்கான செயற் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள வெப்பநிலை மாற்றம் மற்றும் வெள்ளத்தின் தாக்கத்தை தவிர்ப்பதற்கு மாவட்டத்தில் சில விவசாய கண்டங்களை முன்கூட்டியே விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்கான சாத்திய வளம் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் விவசாயத்திற்கான நீர்பாசன முகாமைத்தும் மற்றும் மழை நீரை சேமிப்பதற்கு புதிய குளங்களை அமைத்தல், மற்றும் கரையோர பிரதேசத்தில் உள்ள விவசாய கண்டங்களை முன்னுரிமை அடிப்டையில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு கோரிக்கை அமைப்பினரினால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ரி.கிரிதரன் நெற்செய்கை தொடர்பான கடந்த கால புள்ளிவிபரங்களில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பாக அளிக்கை செய்தார்.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந்த், மத்திய நீர்ப்பாசன பொறியியலாளர் இப்றாகிம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநீதன், மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் எம். எஃ .ஏ.சனிர், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
