கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரியும் அவருக்கு உடந்தையாக இருந்த செவ்வந்தி என்ற பெண்ணும் சேர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டிற்குள் வைத்து பாதாள உலகக் குழு தலைவர்களுள் ஒருவராக கணேமுல்ல சஞ்சீவ, சட்டத்தரணி வேடம் தரித்து வந்த சந்தேகநபரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
குற்றவியல் சட்டப் புத்தகத்திற்குள் சூட்சுமமான முறையில் மறைத்து எடுத்து வந்த துப்பாக்கியால் சஞ்சீவவை சுட்டுப் படுகொலை செய்ததுடன், அங்கிருந்து உடனடியாக தப்பித்தும் சென்றிருந்தார்.

இதற்கு செவ்வந்தி என்ற ஒரு பெண்ணும் உடந்தையாக செயற்பட்டதுடன், துப்பாக்கி மறைத்து வைத்திருந்த புத்தகத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து வந்ததும் அந்த பெண்தான் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், துப்பாக்கிச் சூட்டினை நடத்திய பிரதான சந்தேகநபர் 8 மணித்தியாலங்களுக்குள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டாலும், உடந்தையாக செயற்பட்ட செவ்வந்தி என்றப் பெண்ணை இதுவரை கைது செய்ய முடியவில்லை.
மேலும், சம்பவம் தொடர்பில் செவ்வந்தியுடன் தொடர்பினை பேணியதாக தெரிவித்து நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் அதிகாரியும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், தேடப்பட்டு வரும் சந்தேகபரான செவ்வந்தி என்றப் பெண் போதைப் பொருள் விற்பனை செய்தமைக்காக இதற்கு முன்னர் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பதும் அவரின் குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்களின் மூலம் தெரியவந்தது.
இந்தநிலையில், தற்போது கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட செவ்வந்தி என்ற பெண்ணும் சேர்ந்து இருப்பது போன்றதான செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது.