“வீடுகளைக் கொளுத்தி அரகலய மூலம் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. ஜனநாயக வழியிலேயே எமது அரசியல் பயணம் தொடரும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“எம்மிடம் ஆயுதப் படை இல்லை. வீடுகளைக் கொளுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொன்று அரகலய மூலம் ஆட்சியைப் பிடிக்க மாட்டோம். ஜனநாயக வழியில் எமது பயணம் தொடரும்.

ஆளுங்கட்சியிலுள்ள 159 நாடாளுமன்ற உறுப்பினர்களால் பலனில்லை என ஜனாதிபதி கருதினால் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு , நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்ல முடியும்.
எம்மிடம் வேலைத்திட்டம் உள்ளது, தூரநோக்கு சிந்தனை உள்ளது.கடந்த காலங்களில் செயற்பட்ட அனுபவம் உள்ளது.
எனவே, ஜனநாயக வழியில் எந்நேரத்திலும் ஆட்சியைப் பொறுப்பேற்கத் தயார். எந்தக் கட்சியாக இருந்தாலும் இளைஞர்களைப் பொறுப்புடன் வழிநடத்த வேண்டும்.
புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் வகையில் நாம் இளைஞர்களை வழிநடத்துவோம்” என குறிப்பிட்டுள்ளார்.