மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைபவனி, நான்காவது நாளான நேற்று மன்னார் மடு வீதியை அடைந்தது.
இந்த நடைபவனியை முன்னெடுப்பவர்கள் இன்றைய தினம் மடு பகுதியில் தங்கியிருந்து, மீண்டும் நாளைய தினம் செட்டிக்குளம் நோக்கி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது நடைபயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் முல்லைத்தீவில் இருந்தும் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு – புதுகுடியிருப்பு நகரப் பகுதியில் இருந்து இன்று காலை 9 மணிக்கு குறித்த ஆதரவு நடைபவணி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபவனி இன்று இரவு கிளிநொச்சியில் நிறைவுபெறுமென மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவின் வட மாகாணத்துக்கான ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை மாண்புமிகு மலையகம், யாழ்ப்பாணம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்துள்ள ஆதரவுப் பேரணியொன்றும் யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் நாளை காலை 8.30 அளவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.