சமுர்த்தி கொடுப்பனவை பெறும் குடும்பங்களில் அஸ்வெசும திட்டத்திற்கு தெரிவு செய்யப்படாதவர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்கும் குடும்பங்களில் அஸ் வெசும திட்டத்திற்கு தகுதி பெறாத 3,93,097 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை தொடர்ந்து வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்
ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள தகுதி பெற்றவர்கள் விரைவாக தமது வங்கிக்கணக்கை திறக்குமாறு இராஜாங்க அமைச்சர்ஷெஹான் சேமசிங்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அஸ்வெசும கணக்கை திறப்பதற்காக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிகளின் பல கிளைகள் நேற்றும் திறக்கப்பட்டிருந்தன.
பயனாளிகளை தெரிவு செய்யும் நடை முறையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக மேன்முறையீடுகள் கோரப்பட்ட துடன், அவை மறுபரிசீலனை செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு கடந்த நாட்களில் கடிதங்கள்அனுப்பப்பட்டன.அதற்கமைய, பிரதேச செயலகங்களாக வழங்கப்படுகின்ற கடிதங்களை பெற்றுக்கொண்டு தெரிவு செய்யப்பட்டுள்ள 4 அரச வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் கணக்குகளை திறக்கவேண்டும்.
அஸ்வெசும தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாகவும், அது நிறைவடைந்தவுடன் புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர்
ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.