ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியா வீதிப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் கீத் நொயார் வேனில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார்.
இந்த சம்பவத்துடத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நேற்று சனிக்கிழமை (01) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நவகத்தேகம மற்றும் எலயபத்துவ பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 மற்றும் 46 வயதுடைய நவகத்தேகம மற்றும் உலுக்குளம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும்,
இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வுப் பணியாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 2018ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.