இலங்கை பெண் ஒருவரிடம் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அப்பெண்ணிடம் தாலியை மீள ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் முடிந்து, குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார்.
இதன்போது சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்த பெண் உள்ளிட்ட மூன்று பெண்கள் அணிந்திருந்த தாலிக்கொடி, வளையல்கள் போன்றவை கடத்தல் நகைகள் எனக்கூறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 15ம் திகதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பெண்களுக்கு தாலி மிக முக்கியமானது. தாலி அணிந்து வருவது கடத்தல் அல்ல. எனவே, சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தாலிக் கொடியை, இலங்கை பெண்ணுக்கு திருப்பித் தர வேண்டும்.என்று உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, பறிமுதல் செய்த தாலிக்கொடியை திரும்ப பெறுவதற்காக, அப்பெண் நேற்று முன்தினம் இரவு, சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு சென்ற போது அவர்களிடம் தாலி கொடியை, அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.