எதிர்க்கட்சி விடுத்த கோரிக்கைக்கமைய சில நாடாளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம், ஒப்புக்கொண்டுள்ளது.
எனினும் நாடாளுமன்ற விவகாரங்கள் குழுவில் மாற்றம் செய்ய முடியாது என அறிவித்துள்ளது.
சமீபத்தில், எதிர்க்கட்சி பல முக்கியமான நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினர்கள் நியமிக்காமல் இருக்கவும், அதிகார பூர்வமாக கலந்துகொள்ளாமல் இருக்கவும் முடிவு செய்திருந்தது.
அந்தக் குழுக்களில் எதிர்க்கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவிற்கு எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இருப்பினும், சில குழுக்களில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் தற்போது அந்தக் குழுக்களுக்காக உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த குழு மிக முக்கியமான குழுவாக காணப்படுவதால், அதில் மாற்றங்கள் செய்ய முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றக் குழுக்கள் நாட்டின் நிர்வாகத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை சட்டங்களை ஆய்வு செய்யவும், அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், பொது நிதிகள் மற்றும் அரச உரிமையுள்ள நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.