அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திஸ்ஸமஹாராம பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
16 வயதுடைய சிறுமி மேலதிக வகுப்புக்குச் செல்வதாக தாயாரிடம் கூறிவிட்டு, தனது காதலனுடன் இணைந்து கிரிந்த பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்.
இதனை அறிந்துகொண்ட தாயார் சிறுமியை அழைத்து அவரிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.

கோபமடைந்த சிறுமி வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், வீட்டில் உள்ள அறை ஒன்றில் வைத்து சிறுமியிடம் விசாரணைகளை நடத்தியுள்ளார்.
இதன்போது இந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பின்னர் சிறுமியின் தாயார் இது தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.