ஜெலன்ஸ்கியின் தலைமை அமெரிக்க-உக்ரைன் உறவுகளுக்கு தடையாக மாறிவிட்டதாகவும் அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவேண்டுமெனவும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் தெரிவித்தமைக்கு உக்ரைன் ஜனாதிபதி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி பதவி விலகிய பின்னர், எங்களுடன் சரியாக பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய ஒருவரை அனுப்ப வேண்டும், அல்லது அவர் மனம் மாற வேண்டும் என்று கிரகாம் கூறினார்.

மேலும், வெள்ளை மாளிகையில் நடந்த விவாதம் ‘பேரழிவு’ என்று கூறிய அவர், ஜெலன்ஸ்கியின் தலைமை அமெரிக்க-உக்ரைன் உறவுகளுக்கு ஒரு தடையாக மாறிவிட்டதாக கூறினார்.
அமெரிக்க செனட்டர் கூறிய கருத்துக்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, ‘கிரகாம் நல்ல மனிதர், அவரது கருத்தை மதிக்க விரும்பினால், அவர் உக்ரைன் குடிமகனாகவேண்டும்’ என்றார்.

“கிரகாம் உக்ரைனுக்கு வந்தால் நான் அவருக்கு உக்ரைன் குடியுரிமையை வழங்குவேன். அவர் எங்கள் நாட்டின் குடிமகனாக மாறுவார். அதன்பின்னர் அவரது குரல் வலுவடையும். அப்போது, யார் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற தலைப்பில் உக்ரைனின் குடிமகனாக அவர் பேசுவதை நான் கேட்பேன்” என்றார் ஜெலன்ஸ்கி.
இதற்கு பதிலளித்த கிரகாம், “துரதிஷ்டவசமாக, தேர்தல் நடைபெறும் வரை, உக்ரைனில் யாருக்கும் ஆதரவாக குரல் கொடுக்க முடியாது” என்றார். நீண்டகாலமாக உக்ரைனின் ஆதரவாளராக இருந்த கிரகாம் தற்போது ஜெலன்ஸ்கியின் கடுமையான விமர்சகராக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.