இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின் தலைமையில் 2025.03.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும் இதில் கலந்துகொண்டார்.

தென்னை பயிரிச்செய்கையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாண்டில் 2.5 மில்லியன் தேங்காய் விதைகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் MOP உரத்தில், 27,500 மெட்ரிக் தொன் தற்போது தென்னை பயிற்செய்கைக்காக 56,000 மெட்ரிக் தொன் கலப்பு உரத்தைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்குவதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
அதற்கமைய, அந்த கலப்பு உரம், சந்தை விலை அண்ணளவாக 9,500 ரூபாய் கொண்ட 50 கிலோ கிராம் உர மூட்டையை 4,000 ரூபாய் மானிய விலையில் இந்த மாத இறுதியில் நாடு பூராகவும் உள்ள தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.