அக்கரைப்பற்று 8ஆம் பிரிவில் இன்று (10) அதிகாலை நேரத்தில் திருட வந்த நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த நபரும் அவனது நண்பர்களும் இணைந்து நேற்றிரவு (09) முதல் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதிகளில் பல இடங்களில் திருட முயற்சித்துள்ள நிலையில் ஒருவன் மாத்திரம் வசமாக மாட்டிக்கொண்டார்.
குறித்த நபர் வீட்டில் உள்ளவர்களின் நடமாட்டத்தை அவதானித்து வீட்டிற்குள் புகுந்து அறை ஒன்றினுள் ஒளிந்திருந்து அங்கிருந்த பை ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகையில் அதனை அவதானித்த வீட்டின் பெண் கூச்சலிடவே அவ்விடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இருந்தபோதிலும் அயலவர்களின் முயற்சியால் பிடிக்கப்பட்ட நபரை மக்கள் நையப்புடைத்து திருடப்பட்ட பை ஒளித்து வைக்கப்பட்ட இடத்தினை காட்டுமாறு தாக்கினர்.
அடியினை தாங்கமுடியாத நபரும் குறித்த வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றருக்கு அப்பால் உள்ள வீட்டில் அவ்வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமலே மறைத்து வைக்கப்பட்ட பையினை எடுத்து கொடுத்துள்ளார்.
அத்தோடு தன்னுடன் வந்த ஏனையவர்களின் விபரத்தினையும் வழங்கியதோடு திருடிய முறை தொடர்பிலும் பொதுமக்கள் மத்தியில் கூறியுள்ளார். திருடனை நையபுடைத்த பின்னர் பொதுமக்கள் நபர் ஊர்லமாக கொண்டு சென்று அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேநேரம் அநாதை இல்லங்களுக்கு நிதி அறவீடு மற்றும் ஏழைகளுக்கான நிதி அறவீடு என கூறிக்கொண்டு யாருடைய அனுமதியுமின்றி கிராமங்களுக்குள் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாடுகின்றதாகவும் அவர்கள் தொடர்பில் அவதானமாயிருக்குமாறு அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.