மாண்புமிகு மலையக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் நேற்று (02) புதுக்குடியிருப்பில் ஆரம்பமான பேரணி இன்றும் (03) இரண்டாம் நாளாக காலை 9 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்துள்ளது.
மலையகம் 200ஐ முன்னிட்டு ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளிலான மலையக எழுச்சி நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் ஆரம்பமான நடைபயணம், இன்று கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் புறப்படுகிறது.
இதனையடுத்து, நாளை வெள்ளிக்கிழமை (04) வவுனியாவில் ஆரம்பமாகும் மாண்புமிகு மலையக மக்கள் பேரணியின் நடைபயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளது.
இந்த நடைபவனிக்கு ‘சிறகுகள்’ அமைப்பினர், நவஜீவானம், மகாசக்தி, செல்வநாயகம் நினைவு அறக் கட்டளை, ஒப்பர் சிலோன், கிளிநொச்சி வர்த்தக சங்கம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அருட்தந்தையர்கள், ‘விழுதுகள்’ அமைப்பினர், சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தினர், மலையக மக்களின் உரிமைகள் தொடர்பில் ஆர்வம் கொண்ட பல்வேறு தரப்பினர், பொதுமக்கள் என பெருமளவினர் ஆதரவு வழங்கினர்.