மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவர்கள் இன்று (11) காலை உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கரடியனாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரடியனாறு மகா வித்தியாலத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் காலை உணவு வாங்கி உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு சுகவீனத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் சம்பவதினமான இன்று (11) காலை இடைவேளை நேரத்தில் சிற்றுண்டிச்சாலையில் இடியப்பம், புட்டு, இட்டலி, நூடில்ஸ் ஆகிய உணவுகளை மாணவர்கள் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பகல் ஒரு மணியளவில் சிற்றுண்டிசாலையில் உணவு வாங்கி சாப்பிட்ட பல மாணவர்கள் வாந்தியெடுக்க தொடங்கியதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது
இதன்போது 32 ஆண்கள், 22 பெண்கள் அடங்களாக 54 மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக செங்கலடி வைத்தியசாலைக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையின் போது பழுதடைந்த நூடில்ஸ் விற்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிற்றுண்டிச்சாலை நடாத்தி வந்த பெண் உரிமையாளர் பொலிஸாரிடம் சென்று சரணடைந்துள்ளதையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் கரடினாயனாறு பொலிஸார் மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அதிகாரிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

