அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில், கொக்கெய்ன் போதைப் பொருள் விநியோகத்தில் பங்கேற்ற சம்பவத்தில் சிட்னி நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
ஆறு மணி நேரத்திற்கும் மேலான விவாதங்களுக்குப் பின்னர், வணிக அளவிலான போதைப்பொருள் விநியோகத்தில் பங்கேற்றதற்காக 54 வயதான அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.

அவர், 2021 ஆம் ஆண்டில் தனது தனிப்பட்ட கொக்கெயின் வியாபாரியை ஒரு நண்பருக்கு அறிமுகப்படுத்தியதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஜோடி தங்களுக்குள் 200,000 அமெரிக்க டொலர் போதைப்பொருள் ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டினர்.
அடுத்தடுத்த பரிவர்த்தனையில் மெக்கில் ஈடுபடவில்லை என்றாலும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விநியோகத்தில் தெரிந்தே பங்கேற்றமையால், அவரை குற்றவாளி என்று கண்டறிந்ததாக சிட்னி மாவட்ட நீதிமன்ற பதிவுகள் காட்டுகின்றன.
இந்த நிலையில், மெக்கில்லுக்கு, எதிர்வரும் மே மாதம் தண்டனை விதிக்கப்படும். 1998 மற்றும் 2008க்கு இடையில் அவுஸ்திரேலியாவுக்காக மெக்கில் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.