தமிழரசை உடைப்பவர்களுக்கு ‘தமிழரசு’ என்ற சொல் தேவைப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் ,
இரண்டு தினங்களுக்கு முன்பதாக சில ஊடகங்களில் புதிய தமிழரசு கட்சி உருவாக்கம் என்றும் அதற்கு கல்விமான்கள், இந்தியாவில் இருக்கின்ற தமிழ் தேசியவாதிகள், புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இணைந்து புதியதோர்தமிழரசுக் கட்சியை உருவாக்குவதாகவும் அதில் முக்கியமாக தமிழரசு கட்சியின் எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவரைத் தவிர ஆறு பேரும் அதற்க்கு ஆதரவு என்ற வகையிலும் கட்சியை பிளவு படுத்துகின்ற வகையிலும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நான் நேரடியாக தொலைபேசியில் பேசி இருந்தேன்.
அவர்களுக்கு இது தொடர்பாக எது விதமான எண்ணங்களும் கிடையாது. இலங்கை தமிழ் மக்களுக்காக இருக்கின்ற ஒரே ஒரு பாரம்பரிய கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி அதனை எப்படியாவது உடைத்து விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு செய்யப்பட்ட புனையப்பட்ட ஒரு விஷமத்தனமான செய்தி இது.
தமிழரசு கட்சியை பொறுத்த வரையில் அதன் 75 வருட கால வரலாற்றில் சோரம் போகாத பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி தமிழரசுக் கட்சி. ஊழலில் ஈடுபடாதவர்கள் இருக்கின்ற கட்சி தமிழரசு கட்சி.

தமிழரசு என்றும் புதிய தமிழரசு என்றும் புதிய கட்சிகளை உருவாக்குவோர்களுக்கு தமிழரசு என்ற சொற்பதம் தேவைப்படுகிறது.
தமிழரசுக்கட்சியை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல் தேவைப்படுகிறது. இந்த முயற்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் தெற்கின் நிகழ்ச்சிநிரலில் செயற்படுகிறோம் என்பதை தெரிந்துவைத்துள்ளார்களோ தெரியாது எனத்தெரிவித்தார்.