ஹிங்குராக்கொடை, திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்து மெதிரிகிரிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (14) இரவு திவுலங்கடவல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்திருந்த இரண்டு பாடகர்கள் கலந்து கொள்ளத் தவறியதால் இந்த குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த இசை நிகழ்ச்சி பாடகர்கள் குழு பங்கேற்புடன் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் விளம்பரப்படுத்தியிருந்துள்ளதுடன் 1,000 மற்றும் 2,500ரூபாவுக்கு டிக்கெட்டுகளை விற்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு இசை நிகழ்ச்சி தொடங்கியதாகவும், பங்கேற்க திட்டமிடப்பட்ட இரண்டு பாடகர்கள் வருகை தரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அறிவிப்பாளர் அதிகாலை 1.30 மணியளவில் இசை நிகழ்ச்சி முடிவடைவதாக அறிவித்த நிலையில், பார்வையாளர்கள் கோபமடைந்து மோசமான வகையில் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இசை நிகழ்ச்சியில் இருந்த நாற்காலிகள் உட்பட சொத்துக்களும் இசைக்குழுவின் இசைக்கருவிகளும் தாக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்தில் சுமார் 45 பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போதிலும் அவர்களால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பான விசாரணையில், இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாக்குறுதியளித்த தொகையை செலுத்தாததால், சம்பந்தப்பட்ட இரண்டு பாடகர்களும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்ததாக மெதிரிகிரிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
