மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகரசபை உட்பட 11 உள்ளுராட்சி மன்றங்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றோம் எனவே கோடரி காம்புகளுக்கு தொடர்ந்து வாக்குளை அளிக்காமல் சரியான ஒரு நேர்மையான ஒரு தலைமைத்துவத்துக்கு கீழே மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கின்ற எமது கட்சியில் போட்டியிடுகின்றவர்களுக்கு வாக்குகளை அளிக்க, அனைத்து மக்களும் முன்வரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாநகரசபை, ஏறாவூர் நகரசபை உட்பட 11 சபைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகிய நாம் போட்டியிடுகின்றோம். அதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளோம். சகல சபைகளையும் கைப்பற்றி ஆட்சி அமைப்போம்.
உள்ளூர் கட்டுமானங்களை மேற்கொள்வதற்காக இந்த தேர்தல் நடாத்தப்படுகின்றது. ஆகவே உள்ளூரிலே மிக நேர்மையாக மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கின்ற நபர்களை அந்தந்த ஊர்களிலே போட்டியிட நிறுத்தியுள்ளோம். எனவே அந்த நபர்களை தெரிவு செய்து ஒரு சரியான தலைமைத்துவத்தை பலப்படுத்துவதற்கு இனியாவது மக்கள் ஒரு சரியான நிலைப்பாட்டிற்கு வரவேண்டும்.
எங்களுடைய கூட்டு விடையத்திலே தொடர்ந்தும் பேசிவருகின்றனர். அது தொடர்பான விரிவான விடையங்களை எமது தலைவர் ஒரு சில நாட்களில் தெளிவாக வெளியிடுவார்
ஆனால் எங்களை பொறுத்தமட்டில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிராகரிக்கின்ற நல்லாட்சி காலத்தில் கொண்டுவரப்பட இருந்த ஏக்கிய இராஜியம் கிடைப்பிலே கிடக்கின்ற அந்த அரசியல் அமைப்பை நிராகரிக்கின்ற மற்றும் தமிழ் மக்களுக்கு இடம்பெற்றிருந்த இனழிப்பு தொடர்பாக விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டு போவதற்கு உறுதுணையாக, அதை பின்பற்றுகின்ற தரப்புக்களுடன் இணைந்து நாங்கள் பயணிப்பதாக இருந்தால் நிச்சயமாக எமது தலைமைத்துவம் சரியான முடிவினை எடுப்பார்கள் என்றார்.