முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்ளுமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் விடுத்த வோண்டுகோளுக்கு – தாம் எந்தவித உறுதி மொழியினையும் வழங்காமல் திருப்பி அனுப்பி விட்டதாக, அந்தக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை சந்திக்க வேண்டுமென – முஷாரப் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, கடந்த 14ஆம் திகதி – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமின் கொழும்பிலுள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இந்தச் சந்திப்பில் தான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோரும் கலந்து கொண்டனர் எனவும் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
“இதன் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் – முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கொள்வது தொடர்பில் சில விடயங்களை முன்வைத்தார். இருப்பினும் நாம் எந்தவிதமான உறுதிமொழியையும் அவருக்கு வழங்கவில்லை.

இந்த விடயம்ம் தொடர்பில் பொத்துவில் தொகுதியின் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசியே முடிவெடுப்போம்” என, முஷாரபிடம் கூறியதாகவும் நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக 2020ஆம் ஆண்டு – அம்பாறை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் சென்ற எஸ்.எம்.எம். முஷாரப், அந்தக் கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, ஆளுந்தரப்புடன் இணைந்து ராஜாங்க அமைச்சர் பதவியினையும் பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் – ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியில் (சிலின்டர் சின்னத்தில்) – அம்பாறை மாவட்டத்தில் முஷாரப் போட்டியிட்ட போதும், அந்தக் கட்சிக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, தனித்து நின்று அரசியல் செய்யப் போவதாகத் தெரிவித்து, ‘கழகம்’ ஒன்றை அண்மையில் ஆரம்பித்திருந்த நிலையிலேயே, தற்போது முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கு முஷாரப் முயற்சித்துள்ளார்.